
ப்ளாக் ஆரம்பிச்சு ஒரு வருஷம் தாண்டிடுச்சு. இன்னும் உருப்படியா, கழுத்தறுக்காம ஒரு போஸ்ட் எழுதியிருக்கிறேனான்னு தெரியல. அதிலும் இதுவரைக்கும் மொத்த பதிவுகளே 56 தான். நான் மாசம் 4 பதிவு தாண்டுவதற்குள்ள நாட்டுல விலைவாசி நாப்பது மடங்கு தாவுது. என்ன செய்ய??? சரி, தனித்தனியா பதிவெழுதி அறுக்கமுடியாட்டிலும், 2012ல் வெளியாகி நான் பார்த்த படங்களில் பெஸ்ட்டுன்னு நினைக்கிற படங்களையெல்லாம் இந்த போஸ்ட்டுல சொல்லிடுவமேண்ணு...
முதல்ல.. கண்டிப்பா, இது என்னோட சாய்ஸ் மட்டுமே. உங்களுக்கு பிடிக்கும்..பிடிக்கணும்னு எல்லாம் கட்டாயம், நிச்சயம் இல்லை. முதல்ல டாப்-10 கவுண்ட்டௌன் போடுவோம்னு தோணிச்சு. அப்புறம், ஏன் வம்புன்னு பிடிச்ச படங்களையே எழுதிடறேன். உங்களால முடிஞ்சா, உங்களுக்கு பிடிச்ச ஓடர்ல கமெண்ட் பண்ணிட்டுப் போங்க. மேலும், இவை எல்லாம் நான் பார்த்திருக்கும் படங்கள் மட்டுமே. அப்படியே நான் தவறவிட்ட படங்கள் எதாவது இருந்தா சொல்லிடுங்க. பார்த்துடறேன்.
(படத்தின் தலைப்புகளில் விரிவான விமர்சனத்திற்கு லிங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது)
The Dark Knight Rises
டிம் பர்டன் காலத்தில், காமெடியன் ரேஞ்சுக்கு அவதிப்பட்ட பேட்மேன் எனும் சூப்பர்ஹீரோவை, தூசு தட்டி மீண்டும் உயிர்கொடுத்த கிறிஸ்டோபர் நோலனின் பேட்மேன் சீரீஸில் மூன்றாவது படம். என்னைப் பொறுத்தவரையில் இந்த வருஷம் ரொம்ப எதிர்ப்பார்த்திருந்த படம்னா இதுதான்! இரண்டாவது படமான டார்க் நைட் வந்து சக்கைப் போடு போட்டுவிட்டு “ஓட”, அந்தப் படம் வைத்த பாரை தாண்டியாகணுமேன்னு நோலனுக்கு பி.பீ எகிறிச்சோ என்னமோ, அதில் காட்டிய வித்தை இதில் நிச்சயமாக கொஞ்சம் மிஸ்ஸிங்! ஆனாலும் நிச்சயம் டாப் லிஸ்டில் வரவேண்டிய படம் தான்.
ஆனாலும் $250 மில்லியனைக் கொட்டி படமெடுத்தாலும், ஆனாலும் முதல் நாள் ஸ்க்ரீனிங்கில் நடந்த துப்பாக்கிச்சூடு தியேட்டர் பக்கம் வர்றவங்களை கொஞ்சம் பயமுறுத்தினாலும், த டார்க் நைட் கொடுத்த நம்பிக்கையில் ஆளாளுக்கு தியேட்டர்ல வந்து கொட்டின காசை வைத்து $1000 மில்லியனுக்கு மேல புரட்டிட்டாங்க! இந்த வருஷத்தோட இரண்டாவது அதிகம் வசூலை அள்ளிய படமும் இது தான்.
The Avengers
ஒரு மாதிரி 2008ல் Iron Man தொடங்கி, 2011ல் Thor, Captain America வரைக்கும் பிட்டு பிட்டா போட்டு கடைசியில மே மாசம் ரிலீஸ் பண்ணிட்டாங்க. பீட்டர் ஜாக்ஸனின் WETA Digital உட்பட 14 கம்பெனிகளின் விஷுவல் எஃபெக்ட்ஸ் புண்ணியத்திலும், சூப்பர்ஹீரோக்களின் காமெடி கலந்த அட்டகாசமான திரைக்கதையும் எல்லாருக்கும் பிடித்துவிட, வருடத்தின் மிகப்பெரிய ப்ளாக்-பஸ்டர் ஹிட் இதுதான்.
சும்மாவே மார்வல் தனி சூப்பர்ஹீரோ படம்னா கலெக்ஷன் அள்ளும்! அது போதாதுன்னு எல்லாரையும் ஒண்ணா கூட்டு சேர்த்து விட்டா சொல்லவா வேணும்? இதுவரைக்கும் மொத்தம் $1500 மில்லியனுக்கு கல்லா கட்டிடுச்சு. இதுவரைக்கும் அதிகம் வசூல் பண்ணிய படங்களில் அவதார், டைட்டானிக்கிற்கு பிறகு இது தான். இனி அடுத்ததா, கூட்டணி 2015 படத்திற்கு கூட்டு சேருதாம். முதலாம் பாகத்தில் மார்வலால் கைவிடப்பட்ட ஸ்பைடர்மேனை கூட்டு சேர்த்துக்கலாம்னு பார்த்தா, தற்போது ஸ்பைடர்மேன் படமெடுக்கும் உரிமையை சோனி தன் கைவசம் வைத்திருப்பதால், சோனியும் மார்வலும் கைகுலுக்கி ஒரு முடிவுக்கு வந்தால் மட்டுமே ஸ்பைடர்மேன் அவெஞ்சர்ஸ் 2ல் வலையைப் பின்னுவார் என எதிர்ப்பார்க்கலாம்!
Chronicle
இந்த வருஷத்தோட ஒரிஜினல் சூப்பர்ஹீரோ கதை என்றால் இது தான்! வழக்கமா சூப்பர் பவர்ஸ் கிடைச்சதும் ஊரைக் காப்பாத்துறேன். ஏரியா தாதாவை உதைக்கிறேன்னு வழக்கமான ஹாலிவுட் பார்முலாவை உடைத்தெறிந்து, “ஆஹா.. மறுபடியும் வழக்கமான சூப்பர்ஹீரோ படம் தானான்னு நாங்க யோசிச்சிட்டு இருக்கும்போதே, அட.. நீங்க பார்க்கிறது ஒரு சூப்பர்வில்லனோட ஆரம்பம்”னு புதுசா ஒரு கதையைக் கொண்டு வந்தது தான் படத்தின் வெற்றிக்கு காரணம்.
வழக்கம்போல ஒருபடம் வந்தா, முட்டையத் தூக்கி ஸ்க்ரீன்ல வீசுற வரைக்கும் சீக்வல்ஸ் தர்றது ஹாலிவுட் பழக்கமாச்சே? அதே போல இந்தப் படத்திற்கும் ஒண்ணு ரெடியாகுதாம். ஆனா படத்தோட ஸ்க்ரிப்ட் ஃபாக்ஸுக்கு இன்னும் பிடிக்காததால், இன்னும் அதைப்பற்றி பேச்சைக் காணோம்!
என் விமர்சனம் – இங்கே க்ளிக்கிப் படிங்க!
Looper
வருஷத்தோட பெஸ்ட் சயின்ஸ் ஃபிக்ஷன் படம். 12 Monkeys படத்திற்குப் (முதலில் கொஞ்சம் விளங்காதது மாதிரி இருந்தாலும்) பிறகு ரசித்துப் சிறந்த டைம் ட்ராவல் படம்னா இது தான்! வழக்கமான ஒன்லைனர் தான். எதிர்காலத்தில் இருந்து தப்பித்து வரும் ஒருத்தன் நிகழ்காலத்தை சரிசெய்ய முயல்கிறான். அதாவது இங்கே திருத்தினால், அங்கே திருந்தும் என்ற வழமையான கதைக்கரு தான். (எனக்கு இவ்ளோ தான் புரிஞ்சுது. ஹாலிவுட்பாலா படத்தைவிட மோசமா லெக்சர் கொடுத்து தலையை சுத்த வச்சிருப்பார். மேலே தலைப்பில் க்ளிக்கிப் படிங்க) எதுக்கும் கொஞ்சம் முடியை வளர்த்துட்டே படத்தைப் பார்க்க தொடங்குங்க. பிச்சிக்க வசதியா இருக்கும்!
$30 மில்லியன் பட்ஜெட்டில் எடுத்த படம். மொத்த வசூல் இதுவரைக்கும் $160 மில்லியன்.
Moonrise Kingdom
இந்த வருடம் இதுவரைக்கும் பார்த்த படங்களில் என்னோட பர்சனல் பேவரைட் இது தான்.. வெஸ் அன்டர்ஸனிடம் இருந்து இன்னுமொரு தனித்துவமான மாஸ்டர் பீஸ்! எட்வர்ட் நோர்டன், ப்ரூஸ் வில்லிஸ் போன்ற பெரிய தலைகளை வைத்திருந்தும் அனைவரையும் ஓரங்கட்டி விட்டு, படம் பார்ப்பவர்களை குழந்தையாக மாற்றி குழந்தைகளின் உலகை அவர்களின் மனப்போக்கிலேயே காட்டக்கூடிய திறமை இருக்குண்ணா, அது அன்டர்ஸனுக்கு மட்டுமே உண்டு. கட்டாயம் ஆஸ்கார் நாமினேஷன் இருக்கும். கிடைத்தால் மகிழ்ச்சி தான்!
Safety Not Guaranteed
ஒவ்வொரு வருஷமும் ஹாலிவுட்டில் ரிலீஸிற்கு நல்ல ஸ்டூடியோ கிடைக்காமல், லிமிடட் இன்டிபெண்டன்ட் ரிலீஸாக வந்து, வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் பெட்டிக்குள் அடங்கிவிடும் நல்ல படங்கள் அநேகம். அப்படி ஒரு படம் தான் இந்த Safety Not Guaranteed. டைம் ட்ராவல் சம்பந்தப்பட்ட படம்போலத் தோன்றினாலும் படம் முக்கியமா ரொமான்ஸ் பக்கம் தான் அதிகம் சாய்ந்திருக்கு. சீக்கிரம் இதைப் பற்றி ஒரு மொக்கையை எழுதிப் போடுறேன்.
Cabin in the Woods
2010லயே வந்திருக்க வேண்டிய படம். முதல்ல... இயக்குனர் ஜொஸ் வீட்டன் எதிர்த்தும் 3Dல தான் வெளியிடணும்னும்.., அப்புறம் கையில துட்டு இல்லைன்னும் எம்.ஜி.எம் சிவப்புக் கொடி காட்டிக் கொண்டிடேயிருக்க.., பெட்டிக்குள்ளயே ரெண்டு வருஷம் அடங்கியிருந்து கடைசில இந்த வருஷம் தான் ரிலீஸாச்சு. ஒவ்வொரு முறையும் ஒரே கதையை தூசு தட்டி தட்டி, எக்ஸ்ட்ராவா “பாடியையும்” (எல்லா மீனிங்கும் உள்ளடங்க) ரத்தத்தையும் மட்டும் காட்டிய ஹாரர் படங்களில் வித்தியாசமான ஒரு முயற்சி. வழக்கமாக ஹாரர் படங்களின் ஒரே ட்ராக்கில் பயணம் செய்து பழகிய மனம், படம் போகும் போக்கைப் பார்த்துவிட்டு ரைட்டு.. அடுத்த காட்சி இப்படித் தான் இருக்கும் என்று யோசிச்சுக் கொண்டிருக்கும்போது அப்படியே கதை யூ டர்ன் அடிச்சு வேற ஒரு ட்விஸ்ட் இருக்கும். படம் முழுக்க இந்த மாதிரி நம்மகூட மைண்ட் கேம்ஸ் விளையாடிப் பார்த்திருப்பாங்க. இதே போல நல்ல கதை கிடைத்தால், பார்ட் 2ஐ எதிர்ப்பார்க்கலாம்னு இயக்குனர் அறிக்கை விட்டிருக்கார்.
என் விமர்சனம் – இங்கே க்ளிக்கிப் படிங்க!
Skyfall
உளவாளி என்ற வசனம் காதுக்குள் சென்றதுமே, மூளையில் “ஜேம்ஸ்பாண்ட்” என்ற வசனம் பளிச்சிடும் அளவிற்கு புகழ்பெற்ற கரெக்டர், ஹாலிவுட் திரைக்குள் வந்து 50 ஆண்டுகள் நிறைவுறுவதைக் கொண்டாடுவதுடன் வெளியான படம். அதான் அங்கிளுக்கு 50 வயசாச்சே? இன்னும் நாட்டைக் காப்பாற்ற உடம்புல தெம்பிருக்குமான்னு (ஃபிகருங்களை கரெக்ட் பண்றதையும் சேர்த்து தான்) எல்லாருக்கும் சந்தேகம் வரும் நேரத்தில் இன்னும் இருக்கு என்று சொல்லிக்கொண்டு களமிறங்கியிருக்கார் ஸாம் மெண்டஸ். இதுவரைக்கும் வந்த பாண்ட் படங்களில் காட்டப்பட்ட ஸ்டீரியோடைப் பாண்ட் கதாபாத்திரத்தை உடைத்து விட்டு மீண்டும் புதிதாக ஒரு ஆரம்பம். இதுவரைக்கும் வந்ததிலேயே இதுதான் பெஸ்ட்டுன்னும் பேசிக்கிறாங்க. மீ டூ ஸே.. நௌ தி இஸ் ஹௌ எ ரீபூட் ஷுட் பீ!
பிரிட்டனில் Avengers, Dark Knight Rises எல்லாத்தையும் பின்தள்ளிவிட்டு, 2012 ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது இதுதான். (அவனுங்க டேஸ்டே தனி!) பிரிட்டன் $158 மில்லியனும், இதில் அமெரிக்கா $224 மில்லியனைக் அள்ளிக் கொடுக்க, மொத்தம் 952 மில்லியன் வசூல் பண்ணிட்டாங்க. வாழ்க ஜேம்ஸ்பாண்ட்!
The Raid: Redemption
சத்தமில்லாமல் யூ.எஸ்க்குள் புகுந்து ஒரு கலக்கு கலக்கிய இந்தோனேஷியத் தயாரிப்பு. பார்த்த எல்லாரும் ஆஹா ஓஹோன்னு புகழ்ந்த படம். மேலே சொன்ன படங்களோடு ஒப்பிட்டா (Safety Not Guaranteed தவிர்த்து) ரொம்ப சுமாரான வசூல் தான். ஆனா மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆக்ஷன்னா இப்படித் தான் இருக்கணும்னு சொல்லிக் காட்டிட்டு போய்ட்டாங்க. ஆக்ஷன் படங்கள் பிடிக்கும்னா தவறாம எடுத்துப் பார்த்துவிடுங்க.
என் விமர்சனம் – இங்கே க்ளிக்கிப் படிங்க!
Dredd 3D
மேலே சொன்ன Raid Redemption போலவே சேம் கதை. அதில் வில்லன் ஆண்.. இதில் பெண், அது 30 மாடி, இது 200 மாடி.. அது மார்ஷியல் ஆர்ட்ஸ், இது ஹை-டெக் ஷுடிங். இப்படி கொஞ்சம் டிங்கரிங் செய்யப்பட்ட வித்தியாசங்கள் மட்டுமே. ஆனாலும் செம ஸ்டைலிஷ் மேக்கிங்! குறிப்பா அந்த 3D காட்சிகள், அதில் வரும் ஸ்லோ-மோ காட்சிகள் எல்லாம் தியேட்டரில் மட்டுமே அனுபவிக்க முடியும். வரவர மனுஷங்க அஹிம்சாவாதிகளா மாறிட்டு வர்றாங்களோ என்னமோ தெரியல.. படம் பாக்ஸ் ஆபிஸ்ல தோல்வி!
மற்றபடி ரசித்துப் பார்த்த படங்களில் ஞாபகமிருக்கும்.. குறிப்பிட்டு சொல்லும்படியான படங்கள்னா..
- The Hunger Games
- 21 Jump Street
- Brave
- Expendables 2
- Premium Rush
- American Pie – Reunion
- God Bless America
- Killer Joe
- Step Up Revolution
- ParaNorman
- The Amazing Spider-Man
- The Dictator
இன்னும் Argo, Life of Pie, Django Unchained என்று நிறைய நல்ல படங்கள் கேள்விப்பட்டும், ஹார்ட் டிஸ்கில் வைத்துக் கொண்டிருந்தாலும்... ப்ளாக் பக்கம் வரவே டைமில்லாத போது படம் பார்க்க டைம் லேது?? அவற்றை பார்த்தபின் நெக்ஸ்ட்டு இயர் எழுத ட்ரை பண்றேன்.
என்ன தான் இருந்தாலும் தமிழை மறக்கமுடியுமா? So.. எனக்குப் பிடிச்ச படங்கள் சில. (நோ ஓடர். பார்த்த மொத்தப் தமிழ்ப் படங்களில் 70 சதவீதம் இதுக்குள்ள அடங்கும்)
- பீட்ஸா
- நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்
- சுந்தரபாண்டியன்
- இங்க்லிஷ் விங்க்லிஷ்
- ஒரு கல் ஒரு கண்ணாடி
- துப்பாக்கி
- நான்
- நான் ஈ
- அட்டக்கத்தி
- வழக்கு எண் 18/9
- ஆரோகணம்
- தடையறத் தாக்க
சில எக்ஸாம்ஸ், வேலை பிஸி என்று வாழ்க்கை ரொம்ப பரபரப்பா போய்ட்டிருக்கு. கொஞ்சம் டைம் கிடைக்கும்போது படம் பார்த்துக்கிறது மட்டும் தான். ப்ளாக்கர் பக்கம் வந்தா, திரும்ப ஜகா வாங்கிக்க மனசு வராதுங்கறதால எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் என்ட்ரியாகிக் கொள்ளுவமேன்னு இருக்கேன். எப்படியும் ஜனவரி கடைசி வரைக்கும் கொஞ்சம் கஷ்டம் தான்! அதுவரைக்கும் சந்தோஷமா இருங்கோ!!
ஆங்…. Happy New Year 2013!!!!
இந்த வருஷமும் நல்ல நல்ல படங்களா பாருங்க.. சந்தோஷமா இருங்க!
ஹாலிவுட்ரசிகன்