நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

How To Train Your Dragon [2010]


சின்ன வயசுல எனக்கு நாய் ஒன்னு ஓடி வாரத பாத்தாலே உசிரு நின்னுட்டு திரும்பி வரும். பலமுறை ரோட்டுல கடைக்கு ஓடிப் போறப்போ பக்கத்து வீட்டு நாய் துரத்துற டைம்ல நான் அடித்தொண்டைல கத்துறது பக்கத்து தெரு வரைக்கும் கேட்கும். அந்த சத்தத்துல நாயே வந்த ஸ்பீட்ல அப்பீட் ஆகிரும். சில சமயம் பொம்பள புள்ளைங்க வாரப்போ கத்தி மானங் போன சீனும் உண்டு. அஞ்சு வருஷம் முன்னாடி வரைக்கும் நாய்ன்னாலே நம்பியார் ரேஞ்சுக்கு தான் கற்பனை பண்ணி வச்சிருந்தேன்.ஆனால் எங்க வீட்டுல நாய்க்குட்டி ஒன்று வாங்கி வளர்த்த பிறகு தான் நாய் எவ்வளவு நட்பாக இருக்கக்கூடிய பிராணி எனத் தெரிய வந்தது. அது நோய்வாய்ப் பட்டு இறந்தபோது இரண்டு நாள் அழுது கொண்டு இருந்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. என்னோட நாய் (த்தனமான) பிரச்சினையைப் ட்ராகன் ரூபத்தில் எதிர்கொள்ளும் ஒரு வைக்கிங் கூட்டத்தின் கதை தான் இந்த How To Train Your Dragon.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

ஒரு தீவுல பரம்பரை பரம்பரையாக வைக்கிங் கூட்டம் ஒன்றுக்கு இந்த டிராகன்களின் கூட்டத்தினால் பெரும் தொல்லை. அடிக்கடி அவர்களின் கிராமத்தை தாக்கி கால்நடைகளை தூக்கியும், வீடுகளை நாசம் பண்ணியும் விடுகின்றன. அதனால் வைக்கிங்களுக்கும் டிராகன்களுக்கும் தினமும் அக்கப்போர் தான். அந்த வைக்கிங் கூட்டத்திலுள்ள ஒரு வீரனின் திறமை அவன் கொன்றுள்ள டிராகன்களின் அளவை வைத்தே மதிப்பிடப்படுகிறது. ”ஹிக்கப்” தான் நம்ம படத்தோட ஹீரோ. அந்த வைக்கிங் கூட்டத்தோட தலைவரான ஸ்டொய்க் (Stoick)இன் மகன். வைக்கிங்ஸ் என்றாலே பொதுவாக மாமிசமலைகள், காட்டுமிராண்டிகள், மூர்க்கமான போர்க்குணம் படைத்தவர்க்ள் என்று ஒரு கற்பனை வரையறை உண்டு. இங்கும் அப்படித் தான், ஹிக்கப்பைத் தவிர. அவனுக்கு சண்டைகளில் பொதுவாக ஆர்வம் இல்லை. அதனால் ஒரு கொல்லன் பட்டறையில் வேலை செய்கிறான். இது அவனின் அப்பாவுக்கு கவலை அளித்தாலும் பேசாமல் விட்டு விடுகிறார். ஹிக்கப் தானும் ஒரு போர்வீரன் என நிரூபிக்க ஒரு முறை டிராகன் அட்டாக் ஒன்றின் போது தான் தயார் செய்த பொறி ஒன்றின் மூலம் டிராகன் ஒன்றை வீழ்த்துகிறான். ஆனால் யாரும் அவன் சொன்னதை நம்பவில்லை.



மறுநாள் காட்டிற்குள் போகும் ஹிக்கப், அங்கு நைட் ப்யூரி என்னும் டிராகன் ஒன்று வலையில் அகப்பட்டிருப்பதைக் கண்டு அதை கொல்வதற்கு செல்கிறான். ஏனென்றால் கதையில் பல வகையான டிராகன்கள் இருந்தாலும், அவற்றில் மிக முக்கியமானது இந்த நைட் ப்யூரி. டிராகன்களில் அதி-வேகமானது, இதுவரை யாரும் பார்த்திராதது, மற்றும் வைக்கிங்குகளின் எந்த புத்தகங்களிலும் குறிப்பிடப்படாத ஒன்று. அதை கொன்றுவிட்டால் தன்னையும் ஒரு வீரனாக மதிப்பார்கள் என்று ஒரு சின்ன நப்பாசை. ஆனால் அத கொன்னுட்டாத் தான் கதை முடிஞ்சுறுமே ... அதனால அதன் கட்டுகளை அவிழ்த்து விடுகிறான். ஆனால் நைட் ப்யூரியின் இறக்கை ஒன்று உடைந்து விட்டதால் அதனால் பறக்க முடியாமல் தவிக்கிறது. மெல்ல மெல்ல அதனுடன் நட்பு கொண்டு அதற்கு டூத்லெஸ் (Toothless) எனப் பெயர் வைக்கிறான். பின் அதற்காக ஒரு செயற்கை இறக்கையும் செய்து கொடுத்து அதன் மூலம் டூத்லெஸ்ஸை கட்டுப்படுத்தி பறக்கவும் வைக்கிறான்.



இதற்கிடையில் ஹிக்கப்பின் தந்தை தன் வைக்கிங் கூட்டத்தோடு ட்ராகன்களின் இருப்பிடத்தை தேடி படையெடுத்து செல்கிறார். செல்லும் முன் தன் நெருங்கிய நண்பனான கொப்பரிடம் ஹிக்கப்பிற்கு போர்ப்பயிற்சி அளிக்கும் பொறுப்பை அளித்து விட்டு செல்கிறார். அதன்படி ஹிக்கப்பிற்கும், அத்தீவிலுள்ள மற்ற சிறுவர்களுக்கும் டிராகன்களுடன் போரிடுவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில் அஸ்ட்ரிட் (Astrid) எனும் சிறுமி முதலிடம் வருகிறாள். ஆனால் ஹிக்கப் டூத்லெஸ்ஸுடன் பழகியதை வைத்து அடுத்து வரும் போட்டிகளில் ஜெயிக்க பொறாமைப்படும் அஸ்ட்ரிட் ஹிக்கப்பை பின்தொடர்ந்து அவனுக்கும் நைட் ப்யூரிக்கும் உள்ள நட்பை பற்றி அறிந்து கொள்கிறாள். இருவரும் பின் இந்த டிராகன் அட்டாக்ஸுக்கு காரணம், டிராகன் தீவிலுள்ள க்ரீன் டெத் (Green Death) எனும் இராட்சத டிராகன் தான் என அறிந்து கொள்கின்றனர். அப்போது படையெடுப்பிற்கு சென்ற வைக்கிங்ஸும் முயற்சி தோல்வியடைந்து திரும்பி வருகின்றனர்.

ஒரு மாதிரியாக ட்ரெயினிங்கின் இறுதிக் கட்டமாக ஹிக்கப் நைட்மெயார் (Nightmare) எனும் ட்ராகனை எதிர் கொள்கிறான். ஹிக்கப் ”ட்ராகன்கள் நாம் நினைப்பது போல இல்லை. நாம் அவைகளை கொல்லத் தேவை இல்லை என சொல்லிவிட்டு தன் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு அந்த ட்ராகனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போது ஸ்டொய்க் உணர்ச்சிவசப்பட்டு கத்திவிட ட்ராகன் பயத்தில் ஹிக்கப்பைத் தாக்குகிறது. இதன்போது டூத்லெஸ் இடையில் புகுந்து ஹிக்கப்பை காப்பாற்ற முயற்சிக்கும் போது மாட்டிக்கொள்கிறது. ஏற்கனவே ட்ராகன்களின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முயன்று தோற்ற ஸ்டொய்க் நைட் ப்யூரியை சிறைப்படுத்தி அதன் மூலம் ட்ராகன்களின் இருப்பிடத்தை நோக்கி படையெடுக்கிறான்.



வைக்கிங் கூட்டத்தினர் வென்றார்களா? ஹிக்கப் டூத்லெஸ்க்கு என்னவாயிற்று? பெரிய ட்ராகன் அழிக்கப்பட்டதா? வைக்கிங்-ட்ராகன் பகை என்ன ஆயிற்று என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

கதை இப்படித்தான் என்று தெரிந்த பின்பும் கொஞ்சம் கூட தொய்வில்லாமல் சுவாரஸ்யமாக செல்கிறது திரைப்படம். ஏனோ தெரியல ... அனிமேஷன் படங்களை பார்க்கும்போது மட்டும் அந்த டல் ஃபீலிங் வருவதில்லை.

படத்தின் சீ.ஜீ எஃபெக்ட்ஸ் மிக அருமை. சுற்றுப்புற காட்சிகள், ட்ராகன்களின் உடலமைப்பு, டிசைன்ஸ் என பல இடங்களில் கலக்கி இருந்தாலும் முக பாவனை (expressions) ஏரியாவுல ஏதோ ஒன்னு குறையுற மாதிரி ஒரு பீலிங். இந்த ஏரியாவுல நம்ம Pixar அனிமேட்டர்களை அடிச்சுக்க ஆளே கிடையாது. அவங்களோட அனிமேஷன்களில் அந்தந்த கரெக்டர்களின் பீலிங்ஸ் நம்மிடமும் சற்று பிரதிபலிக்கும்.

இன்னொரு முக்கிய அம்சம் ஸ்டொய்க்கிற்கு குரல் கொடுத்திருக்கும் நம் Gerald Butler. அவரின் கரகர குரல் ஸ்டொய்க்கின் உருவத்திற்கு அப்படியே அழகாக பொருந்துகிறது.

மொத்தமாக சொல்லப்போனால் அனைத்து வயதினரும் பார்க்கக்கூடிய ஃபாமிலி என்டடெயினர். மிகவும் பயமுறுத்தக்கூடிய சீன்கள் என்றோ, வன்முறைகள் நிரம்பிய சண்டைகள், கில்மாஸ் என்று ஒன்றும் இல்லாத தரமான படம்.


படத்தின் ட்ரெயிலர் இங்கே :




How To Train Your Dragon : 9/10

எக்ஸ்ட்ரா பிட் I - இந்தப்படம் க்ரெஸிடா கௌவெல் என்னும் அம்மையாரால்(Cressida Cowell)எழுதப்பட்ட 9 புத்தகங்களின் முதல் பாகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். இரண்டாவது பாகம் 2014ல் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எக்ஸ்ட்ரா பிட் II - இந்தப் படத்துல வரைட்டியான ட்ராகன்ஸ் இருக்குன்னு சொன்னேன் இல்லியா??? அவற்றைப் பற்றிய குறிப்புகள் மற்றும் படங்களை பார்ப்பதற்கு இங்கே கிளிக்கவும்.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

7 comments:

  1. நானும் இந்த படம் பார்த்து உள்ளேன்....போன வருஷத்தில் வந்த நல்ல அனிமேஷன் படம்.....

    ReplyDelete
  2. பாஸ்,
    Name Verification ஐ துக்கிடுங்க...அது தான் “Comment Moduration” வேற வச்சு இருக்கேங்கள.

    ReplyDelete
  3. //Name Verification ஐ துக்கிடுங்க...அது தான் “Comment Moduration” வேற வச்சு இருக்கேங்கள.//

    Comment Moderation இப்போதைக்கு போடத் தேவையில்லைன்னு நினைக்கிறேன். அதை இல்லாமல் செய்து விடுகிறேன்.

    தல ... Name Verification ன்னா என்ன? அதை எப்படி remove செய்றதுன்னு கொஞ்சம் சொல்றீகளா?

    ReplyDelete
  4. பாஸ்,
    Exact Procedure தெரியல..

    1. Go to your dashboard: http://www.blogger.com/home/
    2. Click "Settings"
    3. Click "Comments" in the Settings submenu (there is also a tab named "Comments" but that is the WRONG place).
    4. Scroll down to where it says "Show word verification for comments?" and click on the "No" radio button.
    5. Scroll down and click the "SAVE SETTINGS" button.

    ReplyDelete
  5. Step 4ல சொன்னது போல ஒன்னு இல்லயே. :(

    ReplyDelete
  6. நான் பார்த்த படங்களில் மிகச் சிறந்த படங்களை வகைப்படுத்தினால், இதுவும் அதில் அடங்கும். சூப்பர் படம் பாஸ்...

    ReplyDelete
  7. என் விமர்சனத்துக்கு கருத்துக்களை பகிர்ததுக்கு நன்றி, உண்மைய சொல்லனும்னா என் நண்பன் சொன்னான்னு வாங்கி வச்ச படத்தை உங்க விமர்சனத்தை படிச்சதுக்கு அப்புறம் தான் பார்த்தேன்
    http://kathirrath.blogspot.in/2012/08/how-to-train-your-dragon.html

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...