நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

The Elder Scrolls V: Skyrim - [Game]

சரி .... இது மட்டும் ஒரு ஐந்து பதிவுகள் தொடர்ந்து ஹாலிவுட் படங்களைப் பற்றியே போட்டுவிட்டேன். அது தான் இன்னக்கி ஒரு சேஞ்சுக்காக நான் கொஞ்ச நாளா தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் இந்த அருமையான கேமைப் பற்றி ஒரு பதிவ எழுதிருவோம்ணு தோணிச்சு.

எனக்கு பீ.ஸீ கேம்கள் மீது அளவிடமுடியா ஆர்வம் உண்டு. முதன் முதலாக Dave என்ற டாஸ் கேம் விளையாடியதில் இருந்து இன்று வரை அந்த ஆர்வம் சற்றும் குறையவில்லை. இதுவரை ஏராளமான கேம்களை விளையாடி முடித்ததுண்டு. அவற்றில் பிடித்த சீரீஸ் என்று சொல்லப்போனால் Age of the Empires, Call of Duty, Price of Persia, Tomb Raider, , Assassins Creed மற்றும் இன்று கூறப்போகும் Elder Scrolls series.

வீடியோ கேம்களில் பல வகை உண்டு. ஆக்ஷன், அட்வென்சர், ஸ்ட்ராடஜி, ரோல் ப்ளேயிங், ஷுடர்ஸ், ரேஸிங் எனப் பல. ஆனால் எனக்கு மிகவும் பிடித்த ஜென்டர் என்று கூறப்போனால் அது ஷுடர்ஸ், மற்றும் ரோல் ப்ளேயிங் கேம்ஸ் தான்.

FPS (First Person Shooter) கேம்களை பொறுத்தவரையில் நமக்கான வேலை மிகவும் குறைவு. கையில் கன்னை எடுத்தமா, பொட்டு பொட்டுன்னு முன்னாடி வருகிறவனை எல்லாம் சுட்டமான்னு போய்க்கிட்டே இருக்கணும். என்ன அடிக்கடி டைமுக்கு ரீலோட் பண்ணிக்கிறணும்.

ஆனால், ரோல் ப்ளேயிங் கேம்களை பொறுத்தவரையில் அப்படியல்ல. நமக்கு ஒரு கதாபாத்திரம் வழங்கப்படும். அந்தக் கதாபாத்திரத்தை நமக்கு வேண்டிய மாதிரி வடிவமைத்து, அந்த கேம் நம் ஸ்டைலுக்கு ஏற்றாப் போல விளையாடப்படும். இதனால் கேமில் நம்முடைய இன்வால்மென்ட் மிகவும் அதிகம். இதனால் தான் நான் RPG (Role Playing Games) கேம்களுக்கு அதிகம் ஆர்வம் காட்டுவது.Dragonborn

Elder Scrolls V : Skyrim இன் கதை Nirn எனும் ஒரு கற்பனை உலகில் Tamriel எனும் கண்டத்தில் வடபகுதியில் உள்ள Skyrim எனும் இடத்தில் இடம்பெறுகிறது. அந்தப் பகுதியின் பேரரசன் கொலை செய்யப்பட்டுகிறான். இப்போது நாட்டில் பெரும் கலவரம் உண்டாகின்றது. Stormcloaks எனும் கலகக்காரர்கள் பெரும்பான்மையானோர் பேரரசு இல்லாமல் போகவேண்டும் என விரும்பும் அதேவேளையில் சிலர் பேரரசு நீடிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.


Elder Scrolls தன் சீரீஸில் கையாண்டு வரும் கலாச்சாரமான நாம் ஒரு கைதியாக மரண தண்டனைக்கு அழைத்துச் செல்லப்படுவதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. நாம் யார், நம் கதாபாத்திரத்தின் பின்னணி, வரலாறு ஒன்றுமே நமக்கு தெரியாது. எல்லாம் வெட்ட வெளிச்சம். நம் தலையை வெட்டப்போகும் நேரத்தில் ஒரு ட்ராகன் வந்து கோட்டையை தாக்குகிறது. அந்த சமயத்தில் நாம் தப்பிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இந்த சமயத்தில் எமக்கு இரண்டு சாய்ஸ். நாம் கலகக்காரர்களுடன் தப்பித்து செல்லலாம், அல்லது Imperials எனும் படையை சேர்ந்த வீரனுடன் தப்பிக்கலாம். கதை நம் தெரிவுக்கு ஏற்ப மாறும்.பனி மலையிலிருந்து புல் தரை வரை ஒரு
உலகம் உங்களுக்காக
ஏற்கனவே வந்த Elder Scrolls கதைகளில் கூறப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்தின் படி நமக்கு அல்டுய்ன் (Alduin) என்ற அழிவுகளின் ட்ராகன் கடவுள் மீண்டும் வந்து உலகை அழிக்க திட்டமிடுவது தெரியவருகிறது. ஒரு சமயம் நாம் ஒரு நகரை காக்க ட்ராகன் ஒன்றை அழித்தபின் அதன் ஆவி நம் உடலால் உள்ளெடுக்கப்படுகிறது. அப்போது நாம் தான் கடவுள்களால் ட்ராகன்களை அழித்து அல்டுயினை தடுக்க நியமிக்கப்பட்ட Dragonborn என்ற வீரன் என அந்த நகர தலைவன் எமக்கு அறிவிக்கிறான். கதையில் வரும் ஏனைய கதாபாத்திரங்களின் உதவியோடு எப்படி நாம் அல்டுயினை எதிர்கொண்டு வெல்கிறோம் என்பது தான் மீதிக் கதை.

இந்த கேமிலுள்ள முக்கிய விஷேசத்தன்மை நமக்கு தரப்படும் தெரிவுகள் மற்றும் சுதந்திரம். கேம் ஆரம்பிக்கும்போது நமக்கு சில மானிட வகுப்பு வகைகள் தரப்படும். ஒவ்வொரு வகுப்பிற்கும் சில சிறப்பம்சங்கள் உண்டு. உதாரணமாக ஒரு வகுப்பு சிறப்பாக பேசக்கூடிய திறமை, ஒரு வகுப்பிற்கு மந்திரங்கள் போன்றவற்றில் திறமை, இன்னொரு வகுப்பு கத்திச் சண்டைகளில் சிறந்து விளங்கும், இன்னொரு வகுப்பு வில்-அம்பு சண்டைகளில் சிறந்து விளங்கும். நம் ஸ்டைலுக்கு எந்த வகுப்பு ஒத்து வருமோ அதை தெரிவு செய்து விளையாடலாம். அதே போல நம் கதாபாத்திரத்தின் முக-உடல் கட்டமைப்பு,   உடுக்கும் உடை (கவசம்), விளையாட வேண்டிய ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் உங்கள் கையில்.

இந்த கேமின் முக்கிய ஹைலைட் ட்ராகன்களுடன் நாம் செய்யவேண்டிய சண்டைகள். சூப்பர் சாலன்ஜ் ...


இந்த சீரீஸில் பழைய கேம்கள் நாம் செலக்ட் செய்யும் வகுப்பின் திறமைகளை மட்டுமே வளர்க்க உதவும். இந்த Skyrim இல் அது போல அல்லாமல், கேமில் தொடர்ந்து செல்லும் போது லெவல்-அப் செய்து கொள்ளலாம். அப்போது நம் வகுப்புக்கு உள்ள திறமைகளையோ அல்லது மேலே கூறப்பட்டது போல வேறு திறமைகளையோ வளர்த்துக் கொள்ள கிடைக்கும் பாயிண்ட்களை செலவளிக்கலாம்.  ஆகவே நம் திறமைகள் ஒரு கட்டத்திற்குள் அடைபட்டது போல இல்லாமல் மிக ஓபன்னாக வழங்கப்பட்டுள்ளது. அதுபோலவே நாம் தொடர்ந்து ஒரு சில விடயங்களை செய்யும்போது அந்த திறமைகள் மேலும் வளரும் (களவெடுத்தல், இரும்புக் கொல்லன் வேலை, விவசாயம் ... மேலும் பல)

கேம் ஆரம்பித்த பின் ஒரு பெரிய வரைபடம் ஒன்று உங்களுக்கு தரப்படும். அந்த வரைபடத்தில் பல நகரங்கள், குகைகள் என்று செம இன்டரஸ்டிங்கான இடங்கள் உண்டு. வரைபடத்தில் உள்ள எந்த இடத்திற்கும் நீங்கள் கால்நடையாகவோ, அல்லது குதிரை ஒன்று வாங்கியோ பயணிக்கலாம். அதாவது இது நம்ம GTA மாதிரி ஒரு Open World கேம். ஒவ்வொரு இடத்தையும் கண்டுபிடித்த பின்னர் பாஸ்ட்-ட்ராவல் செய்யலாம்.

இந்த உலகில் கதைக்கு சம்பந்தமான ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் ஒவ்வொரு நகரங்களிலும் இருக்கும். நாம் அவர்களோடு பேசுவதன் மூலம் வேலைகளையும் நமக்கு தரப்படும் வேலைகளை முடிக்கத் தேவையான தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம். சில மனிதர்களை நம்மை பின்தொடர்பவர்களாகவும் ஆக்கிக் கொள்ளலாம். சும்மா Random ஆக திரியாமல் அதே கதாபாத்திரங்கள் அந்தந்த இடங்களில் இருப்பதால் நாம் அந்த உலகில் இருப்பது போன்ற ஒரு உணர்வு வருகிறது.

நான் முன்னால் குறிப்பிட்டது போல, இந்த கேமில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு தெரிவும் உங்கள் கதையை திசை திருப்பக்கூடும். எப்படியும் கடைசியாக அங்க சுத்தி இங்க சுத்தி மெயின் பாயிண்ட்டுக்கே விழுந்தாலும் கதை ட்ராவல் பண்ணும் ரூட் மாறுபடும். மேலும் சில மிஷன்களில் நீங்கள் அந்த மிஷனில் வரும் கதாபாத்திரங்களோடு கதைக்கும் போது தெரிவு செய்யும் வசனங்களும் அந்த மிஷனில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதேபோல நீங்கள் கொடுக்கப்படும் வேலைகளை எவ்வாறு வேண்டுமோ அவ்வாறு முடிக்கலாம். எங்காவது தவறு விட்டாலும் வேறு ஏதாவது ஒரு முறையில் முடிப்பதற்கு வாய்ப்பு உண்டு. உதாரணமாக நான் விளையாடும்போது ஒரு மிஷன். அதில் ஒரு அரண்மனைக்குள் பார்ட்டி ஒன்றிற்கு மாறுவேடத்தில் சென்று நைஸாக சில டாக்குமெண்ட்களை திருடி வரவேண்டும். செல்லு முன் அங்கு வேலை செய்யும் நம் ஆள் ஒருவனுக்கு நம் ஆயுதங்கள், கவசங்கள் போன்றவற்றை கொடுத்து விட்டால் அவன் அவற்றை அங்கு ஒரு பெட்டியில் போட்டுவிடுவான். ஆனால் நான் அவனுக்கு என் ஆயுதங்களை கொடுக்கமுன் பார்ட்டிக்கு சென்றுவிட்டேன். இப்போது அரண்மனைக்குள் எந்த காவலாளி கண்டாலும் துரத்தி துரத்தி வெட்டுகிறார்கள். எனக்கும் ஆயுதம், கவசம் எதுவும் இல்லாததால் கொஞ்ச நேரத்தில் நான் காலி. அதனால் நான் அங்கு அரண்மனை கிச்சனில் இருக்கும் கோடரியை எடுத்துக் கொண்டு ஒரு காவலன் தனியாக வரும்வரை அரண்மனை முழுவதும் ஓடி ஓடி, பின் அவனை ஒருமாதிரி கோடரியையும் என் மாஜிக்கையும் பயன்படுத்தி கொன்றுவிட்டு அவனின் கவசம், கத்தி போன்றவற்றை எடுத்து பின்னர் அந்த மிஷனை முடித்தேன்.

உங்கள் மாஜிக் திறமையின் ஒரு சாம்பிள்

கேம்ப்ளே (Gameplay) என்று பார்க்கும் போது செய்வதற்கு எக்கச்சக்கமான விடயங்கள் உள்ளன. நமக்கு சண்டையில் தோற்கும் எதிரிகளின் உடைமைகளை நாம் வேண்டுமானால் எடுத்து வந்து நகரில் இருக்கும் வியாபாரிகளிடம் விற்றுவிடலாம். வரும் தங்கத்தில் வீடுகள், பயணிக்க ஒரு குதிரை, அல்லது நம்முடன் சண்டைபோட ஒரு நாய் என வாங்கிக் கொள்ளலாம். அப்படியும் இல்லாட்டி திறமைகளை வளர்க்க நகர்களில் இருக்கும் சிலரிடம் காசுக்கு ட்ரெயினிங் எடுக்கலாம்.

அதே போல ஒவ்வொரு இடங்களில் கில்ட்ஸ் (Guilds) எனப்படும் அமைப்புகள் உள்ளன. அவை மந்திரவாதிகளுக்கானவை, திருடர்களுக்கானவை, சண்டை வீரர்களுக்கானவை என ஒவ்வொரு விதம். ஒவ்வொன்றிலும் சேர்ந்து அதில் உள்ள மிஷன்களை முடிப்பதன் மூலம் பணமும், விடயங்கள் படிப்பதன் மூலம் எம் திறமைகளையும் வளர்த்துக் கொள்ளலாம்.

மெயின் கதையை ஒவ்வொரு மிஷனாக முடிப்பதற்கே எனக்கு 20 நாட்களுக்கு மேல் எடுத்தன, அதுவும் தினமும் குறைந்தது 1 மணித்தியாலத்திற்கும் மேலாக விளையாடி. அது மட்டுமன்றி சைட்-க்வெஸ்ட்ஸ் (Side Quests) என்று பார்க்கும்போது 100க்கும் மேற்பட்ட மிஷன்கள் உள்ளன. இவற்றை முடிக்க இன்னும் 1 மாதத்திற்கும் மேல் காலம் எடுக்கும்.

இந்த கேமின் முக்கிய பலம் என்று சொல்லக்கூடியது மேலே கூறியது போல இதன் டைவர்ஸிட்டி தான். விளையாடுபவருக்கு இது தான் செய்ய வேண்டும் என்று ஒரு வரையறை இல்லாமல் கேமை எப்படி வேண்டுமோ, அப்படி விளையாடிக் கொள்ளுங்கள் என்று விட்டிருக்கிறார்கள். நீங்கள் ஒரு அட்வன்சரிஸ்டாக இருந்தால் மிஷன்களை செய்யாமல் காடு, மலை, ஆறு, நகரங்கள் என்று அந்த பெரிய்ய்ய்ய்யயய வரைபடத்தை ஆராயலாம். அல்லது மெயின் ஸ்டோரியை முதலில் முடித்து விட்டு பின்னர் கொஞ்ச கொஞ்சமாக மிச்சத்தை முடிக்கலாம். எல்லாம் உங்கள் இஷ்டம்.

பின்னர் அடுத்த பலம் என்று கூறக்கூடியது, இதற்கான பின்னணி இசை. மிக அருமையாக இதற்காக மெனக்கெட்டு இருக்காங்க. கேமின் தீம் மியூசிக்கை 30 பேரை விட்டு கேமிற்காக உருவாக்கப்பட்ட ட்ராகோனிக் மொழியில் பாடவிட்டு பின்னர் அதை 90 பேர் பாடியது போல ஒரு எஃபெக்ட் கொடுத்து இருக்காங்க. கிட்டத்தட்ட சொல்லப் போனால் தி லார்ட் ஒஃப் த ரிங்ஸ் போலவே இந்த சீரீஸிலும் கேமிற்காக ஒரு தனி மொழி, அல்பபெட், ஒரு மாய உலகம் என்று மிகவும் பார்த்து பார்த்து செய்து இருக்காங்க.

இந்த கேம் நொவம்பர் 11ம் திகதி உலகமெங்கும் வெளியிடப்பட்டது. இதுவரை 10 மில்லியனிற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்கப்பட்டு, 620 மில்லியன் டாலர்களுக்கு மேற்பட்ட தொகையை பெற்றுக் கொடுத்துள்ளது. வெளியிடப்பட்டதில் இருந்து மிகவும் பாஸிடிவ்வான விமர்சனங்களையே பெற்றுள்ளது. அனேகமாக அனைத்து கேம் வெப்சைட்களும் இதற்கு 10ல் 9 அல்லது அதற்கு மேலேயே ரேடிங் கொடுத்துள்ளனர். மேலும் IGN, GameSpot போன்ற முன்னணி வலைத்தளங்களிலும் Game of the Year, PC Game of the Year, Best RPG of all time போன்ற விருதுகளை அள்ளியுள்ளது. Wired.com இன் 2011ன் சிறந்த 20 கேம்களில் முதல் இடத்தையும் இது பிடித்துள்ளது. இது இந்த கேமின் இதற்கு முந்திய பகுதியான Elder Scrolls IV : Oblivion வெளியானபோதும் இதே போன்ற நல்ல விமர்சனங்களும் விருதுகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் கேம் தான் விளையாடி ஆகவேண்டும் என்று இருந்தால் கட்டாயம் இந்த கேமை விளையாடத் தவறிவிடாதீர்கள். இந்த முழு வருடத்திற்குமான விளையாட்டை இந்த கேம் ஈடுகட்டும். சிலவேளை ஒரு 3-4 மாதங்களுக்கு இந்த கேமையே நீங்கள் (என்னைப் போல) விளையாடினாலும் விளையாடலாம்.


Elder Scrolls V : Skyim : 100% Satisfaction Guaranteed !!!!எக்ஸ்ட்ரா பிட் I : இந்த கேம் வெளியானபோது கலெக்டர்ஸ் எடிஷன் என்று ஒன்று வெளியானது. அதில் கேமிற்கான வரைபடம், மற்றும் Skyrim உருவான விதம் பற்றி ஒரு DVD சேர்க்கப்பட்டிருந்தது. அந்த டீ.வி.டி வீடியோ யூடியூபில் இருந்து.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

4 comments:

 1. பாஸ்,
  உங்களுக்கும் எனக்கும் சேம் வேவ் லென்த், நானும் தீவிர கேம்ஸ் பிரியன் (வெறியன்).... இதுக்கு ஆகவே 4 வருஷம் முன்னாடி Xbox360 வாங்கினேன்......நான் இன்னும் இந்த கேம் விளையாட வில்லை...கடைசியாக விளையாடியது “Red Dead Redemption” ..... வெஸ்டர்ன் ரோல் ப்ளேயிங் கேம்...ஆனா இது இன்னும் “PC” க்கு வரல...
  இந்த கேம் இப்போ விலை ஜாஸ்தி... இப்போ இது “3,000/- விலை கொறஞ்சா கண்டிப்பா வாங்கி விளையாடணும்..

  ReplyDelete
 2. நீங்களும் விளையாடிப் பார்த்து உங்கள் பார்வையை போடுங்கள் பாஸ்.

  ReplyDelete
 3. //எனக்கு பீ.ஸீ கேம்கள் மீது அளவிடமுடியா ஆர்வம் உண்டு. //
  எனக்கும் தான். இதற்காகவே அசம்பிள்டு சிஸ்டம் வாங்கினேன். அப்பதான் வேணுங்கற போது அப்கிரேடு செய்துக்க முடியும்.

  //அவற்றில் பிடித்த சீரீஸ் என்று சொல்லப்போனால் Age of the Empires, Call of Duty, Price of Persia, Tomb Raider, , Assassins Creed //

  எனக்கு பிடித்த சீரீஸ் Age of the Empires, Price of Persia, Tomb Raider. Assassins Creed இன்ஸ்டால் பண்ணி வைச்சதோட சரி விளையாட முடியல. திருப்பியும் ஆரம்பிக்க வைச்சுட்டீங்க.

  The Elder Scrolls V: Skyrim பத்தி நல்ல எழுதியிருக்கீங்க. என்னோட சிஸ்டம் இந்த கேமை ரன் பண்ணமுடியாது. அப்கிரேடு செய்திட்டு விளையாடறேன்.

  ReplyDelete
 4. @ஹாலிவுட்ரசிகன்


  பாஸ்,
  நானும் இந்த கேம்யை நேத்து தான் வாங்கினேன்.. இப்ப தான் விளையாட ஆரம்பிச்சு இருக்கேன்.... ரொம்ப அருமையான கேம்.....எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு..ஆனா கொஞ்சம் கஷ்டமா இருக்குற மாதிரி இருக்கு,,, போக போக சரி ஆகிருமுன்னு நினைக்கிறன்

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...